மேல்மலையனூர் அருகே போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம், டிச. 25: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வடவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (65). இவர் எஸ்பி நாதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு சொந்தமாக 1.41 ஏக்கர் நிலத்தை கடந்த 2011ம் ஆண்டு முதல் பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகிறேன். இந்த நிலத்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தை சேர்ந்த மனோன்மணி (87), ஜோதிலிங்கம் (49), கேசவன் (48), தாம்பரத்தை அடுத்த சோலையூரை சேர்ந்த அமுதா (65), மாங்காடு புஷ்பா (52), சென்னை திருவான்மியூர் நீலாங்கரை பகுதியை சேர்ந்த இந்திரா (51), திருபெரும்புத்தூர பட்டுநூல்சத்திரம் பகுதியை சேர்ந்த சித்ரா (43), மேல்மலையனூர் அருகே வடவெட்டியை சேர்ந்த பூங்காவனம் (50), பிரகாஷ் (27), மணி (55), மணிகண்டன் (29) ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்துவிட்டனர். இதற்கு வளத்தியை சேர்ந்த வெங்கடபதி (50), சண்முகம் (54) ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சமாகும் என்று அதில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திட எஸ்பி நாதா உத்தரவிட்டார். அதன்பேரில் மனோன்மணி உள்ளிட்ட 13 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரகாஷ், மணி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: