இளம்பிள்ளை அருகே கல்லூரி வாகனம் மோதி பள்ளி சுவர் இடிந்து சேதம் பொதுமக்கள் போராட்டம்

இளம்பிள்ளை, டிச.21: இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட இ.காட்டூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சித்தர் கோயில் பக்கம் இருந்து வந்த தனியார் கல்லூரி வாகனம் ஒன்று, திடீரென பள்ளியின் சுற்றுச்சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில், சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, பள்ளியில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் தனியார் கல்லூரி வாகனத்தை சிறைபிடித்தனர். பள்ளிக்கு புதியதாக சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று சமரசப்படுத்தினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: