சிவன் கோவில்களில் திருவாதிரை திருவிழா - சித்தூரில் தேர்த்திருவிழா

பாலக்காடு,டிச.21:  கேரளாவில் அனைத்து சிவன் கோவில்களிலும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.  கேரளாவில் முக்கிய சிவத்தலங்களான வைக்கம், கடுந்துருத்தி, ஏற்றுமானூர், திருச்சூர் வடக்குநாதர் மற்றும் ஆலுவா சிவன் கோவில்களில் திருவாதிரைத் திருவிழா ஆருத்ரா தரிசனம், சுற்றுப்பிரகார தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருவாதிரை விரதம் மேற்கொண்ட மகளிர் பட்டுச் சேலைகள், கசவு சேலைகள் அணிந்து கோவில் வளாகங்களில் திரண்டிருந்து ஆருத்ரா தரிசனம் செய்தனர்.

பாலக்காடு மாவட்டம் சித்தூர் லங்கேஸ்வரம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் கோவிலில் நேற்று காலை 3 கோவில் நடை திறக்கப்பட்டு கணபதிஹோமப் பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக  அலங்கார பூஜைகளுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உற்சவர் விசாலாட்சி சமேத விஸ்வநாதருக்கு அபிஷேக-அலங்கார பூஜைகள், சுவாமித் திருக்கல்யாண வைபவங்கள் ஆகியவை நாதஸ்வர மேளங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றன.  இதனையடுத்து உற்சவர்களான விநாயகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆகியோர் பல்லக்கில் செண்டை வாத்யங்கள் முழங்க கோவிலை மூன்று முறை வலம் வந்து துவஜரோகரணப்பூஜைகள் சிறப்பாக நடந்தன.

விநாயகர் சிறிய தேரிலும், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் பெரிய தேரிலும் ஏற்றப்பட்டனர். உற்சவ மூர்த்தியினர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஏராளமான தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று மாலை லங்கேஸ்வரம் அக்ரஹாரம் வீதிகளில் ரதங்களின் பிராயணம் புறப்பட்டு, சித்தூர் பகவதி கோவில், துர்காஸ்டிரம் அக்ரஹாரம் ஆகிய வீதிகளில் ரதங்கள் பிராயணித்து இரவு 10 மணியளவில் கோவில் தேர்முட்டி வீதியில் வந்த நிலையை அடைந்தன.தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலின் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் குளத்தேர் விழாவும் நடந்தன.

பாலக்காடு மாவட்டம் கொடூவாயூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலும் திருவாதிரை தேர்த்திருவிழா வெகுசிறப்பாக நேற்று நடைபெற்றது. விழாவில் திரளாக பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியைத் தரிசித்து வழிப்பட்டனர்.

Related Stories: