புதுச்சேரியில் சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா

புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரியில் சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழாவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மத்திய திரைப்பட பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரே நூற்றாண்டு திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.

இத்திருவிழா இன்று (17ம் தேதி) தொடங்கி 19ம் தேதி வரை 3 நாட்கள் அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நடக்கிறது. இத்திருவிழாவில் சத்யஜித் ரே உருவாக்கிய உலகளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்து, பல விருதுகள் பெற்ற 9 திரைப்படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித் ரே ஆவணப்படமும் திரையிடப்பட உள்ளது. தொடக்க நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. சத்யஜித் ரேயின் முதல்படமான உலகளவில் அனைத்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’ திரையிடப்படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

துவக்க நிகழ்ச்சியில் திரைக்கலைஞர்கள் திரிதிமான் சட்டர்ஜி, எடிட்டர் லெனின், ரோகினி, இயக்குனர்கள் சிவக்குமார், லெனின் பாரதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரெஞ்சு தூதர் டலசி டல் போட் பரே, அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லாம் சதீஷ், இயக்குனர் லீலா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவ தலைவர் தமிழ்ச்செல்வன், டாக்டர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இத்தகவலை அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லாம் சதீஷ் தெரிவித்தார்.

Related Stories: