திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1029 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.30.95 கோடி கடனுதவி

திருவாரூர், டிச. 15: திருவாரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30 கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவாரூரில் நேற்று தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையிலும், எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையிலும நடைபெற்றது. இதில் ஆயிரத்து 29 சுய உதவி குழுக்களுக்கு ரூ.30 கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசுகையில், தமிழக முதல்வர் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில இந்த கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமானது மகளிர் சுயஉதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசார்பு தன்மை மூலம் பெண்கள் முன்னேற்றத்தை மேம்பாடு அடைய செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஆகிய 3முக்கிய திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன் படி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடந்த 1889ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரை கொண்டு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டன. மகளிர் முன்னேற்றத்திற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடு அடைய செய்வதற்காக கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பெண்கள் முன்னேற்றம் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் லேகா, ஒன்றிய குழு தலைவர்கள் திருவாரூர் தேவா, நீடாமங்கலம் செந்தமிழ் செல்வன், துணைத்தலைவர்கள் கொரடாச்சேரி பாலச்சந்தர், திருவாரூர்தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: