கர்ப்ப காலத்தில் உடல் மன ஆரோக்கியம் அவசியம்: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் அறிவுரை

பாடாலூர், மே 1: அடைக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கர்ப்ப காலத்தில் உடல், மன ஆரோக்கியம் இரண்டும் அவசியம் என மருத்துவர் அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு அடைக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான எலந்தலப்பட்டி, டி.களத்தூர், தேனூர், நத்தக்காடு, தொட்டியப்பட்டி, கண்ணாப்பாடி, மாவிலிங்கை ஆகிய கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். செவ்வாய்க் கிழமைகளில் சுழற்சி முறையில் கர்ப்பிணி பெண்களுக்கு தனி கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெப்ப அலை வீசி வருவதால், நேற்று சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவர் அரவிந்த் பேசும்போது, வெயில் காலங்களில் மற்றவர்களை காட்டிலும் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். கோடை காலங்களில் சாதாரணமாகவே, நீர்ச்சத்து அனைவருக்கும் குறைவாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மற்றவர்களை காட்டிலும் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். வெயிலில் உச்சி நேரத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. வெளியில் செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிந்து செல்வது சிறந்தது. கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் அவசியம். உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டசத்து உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அயோடின் நுண்ணூட்ட சத்து அவசியம். அதுபோல நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், விட்டமின்கள் தேவைப்படுவதால் சிறு தானிய உணவுகள் கீரைகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்றார். முடிவில் கர்ப்பிணிகள் அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருந்தாளுநர் ரெங்கராஜ், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கர்ப்ப காலத்தில் உடல் மன ஆரோக்கியம் அவசியம்: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: