திருமுல்லைவாயலில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

ஆவடி: மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்துவைத்தார்.  திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், அண்ணனூர், திருமுல்லைவாயல் பகுதிகளை சேர்ந்த 450 மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.  மேலும், தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டி தரக்கோரி ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் கூடுதல் வகுப்பறை கட்ட 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு, டெண்டர் விடப்பட்டு கட்டிடம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது.  இந்நிலையில்,  கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  இதற்கு, ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் கட்டிடத்தின் 4  வகுப்பறைகளை பார்வையிட்டார். தொடர்ந்து, அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும், பள்ளிக்கு கூடுதலாக என்னென்ன வசதிகள் தேவை என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, பள்ளிக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன், வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோஸ்பின், வட்டார ஆசிரிய பயின்றுனர் கார்த்திகா, திமுக மாநகர செயலாளர் பேபி சேகர், நிர்வாகிகள் சுதாகரன், சரவணன், குப்புராஜ், பாலகிருஷ்ணன், நாகஜோதி, தீனதயாளன், சிறுபதி, சுரேஷ், செல்வம், முல்லை ராஜ், பெருமாள், இளங்கோ, கோபால், உதயகுமார், நாகராஜ், குணசேகர், வெங்கடேசன், அரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

Related Stories: