மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக வளாகத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையின்படி தணிக்கை குழு அளித்த அறிக்கையின் படி பல்வேறு துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.இதில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தலைமை வகித்து பேசியதாவது. தலைமை கணக்கு தணிக்கையாளர் சட்டப்பேரவைக்கு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த காலங்களில் எந்தெந்த துறையில் என்னென்ன தவறுகள் நடந்துள்ளது என்பது குறித்து இப்பொது கணக்கு குழு நேரடியாக கலந்தாய்வு மேற்கொண்டது. அப்போது, எதையெல்லாம் தலைமை கணக்கு தணிக்கையாளர் சுட்டிகாட்டியிருக்கிறார்களோ அது குறித்து அதிகாரிகளுடனும் ஆய்வும் மேற்கொள்ளபட்டது. அப்போது தவறு நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க இக்குழு பரிந்துரை செய்யும்.

இதற்கு முன்னதாக குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருமழிசை கழிவுநீர் சுத்தகரிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மரக்கன்றுகளையும் நட்டனர். பூண்டி நீர்தேக்கத்தில் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்தும், அங்குள்ள அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் உற்பத்தி சார்பில் திருவள்ளுர் நகராட்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் பார்வையிட்டனர்.இக்கலந்தாய்வு எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, பொதுகணக்கு குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன் (வேடச்சந்தூர்), சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார் கோவில்), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஈ.ராஜா (சங்கரன்கோவில்), தி.வேல்முருகன் (பண்ருட்டி), எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்), சட்டப்பேரவை செயலாளர் மற்றும் பொதுகணக்கு குழு செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: