கரூர் உழவர்சந்தை வடிகால் வசதி இல்லாததால் மணவாடி- வெள்ளியணை பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

வேலாயுதம்பாளையம், டிச.7: கரூர் மணவாடி- வெள்ளியணை பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வெள்ளியணை பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது. கரூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த 50 நாட்களாக பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வெள்ளியணை, மணவாடி, ஏமூர் ஊராட்சி மன்ற பகுதிகளில் கனமழை கொட்டியது. தோட்டப் பகுதிகளில் பெய்த மழைநீர் ஊராட்சி மன்ற பகுதிக்குள் நுழைந்தது. குறிப்பாக மணவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாழைபட்டி, காலனி, மணவாடி கஸ்பா ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது. மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை தாந்தோணி வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் மனோகரன், கிராம நிர்வாக அதிகாரி மங்கையர்க்கரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கந்தசாமி, வெள்ளியனை சுப்பிரமணியன் ஆகியோர் மழைநீர் தேங்கிய இடங்களில் பொக்லைன் இயந்திரத்தை கொண்டும், ஆயில் மோட்டார் மூலம் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தினர். இருப்பினும் பொதுமக்கள் வெள்ளியணை, மணவாடி ஆகிய இரண்டு ஊராட்சிமன்ற பகுதிகளிலும் சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அரசு அதிகாரிகள் மழைநீர் நிரந்தரமாக வழிந்தோடும் வகையில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories: