செய்யாறு நகராட்சியில் பைப்லைன்கள் சீரமைப்பு பணி தீவிரம்

*  20 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு

செய்யாறு, டிச.5: செய்யாறு நகராட்சியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பைப்லைன்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. செய்யாறு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகர மக்களுக்கு செய்யாற்றில் உள்ள 16 கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால், குடிநீர் கிணறுகளில் இருந்து வரும் பைப்லைன்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் கொடநகர் பம்ப் அவுசில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். மேலும், பைப்லைன்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கே.ரகுராமன் தெரிவித்ததாவது:  தொடர் மழை காரணமாக, நகராட்சிக்கு நீர் ஆதாரமான குடிநீர் கிணறுகளில் இருந்து, பம்பு அவுசுக்கு வரும் பைப்லைன்கள் சேதம் அடைந்ததாலும், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாலும், ஆற்றில் தற்போது வெள்ளம் செல்வதாலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.

இன்னும் சில தினங்களில் 2 அல்லது 3 கிணறுகளில் பைப்லைன்கள் சீரமைத்து குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது குடிநீர் விநியோகிக்கும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, சில தினங்களில் செய்யாறு நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது, மேலும், புது வெள்ளம் என்பதால் தெளிந்த நீர் இருக்காது. நகராட்சி மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கினாலும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டியே உபயோகிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: