விளாத்திகுளத்தில் மர்ம நோய் தாக்குதலுக்கு 14 ஆடுகள் பலி

விளாத்திகுளம், டிச. 5: விளாத்திகுளம், வேம்பார் சாலையை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி வள்ளி. இவர்கள் பல ஆண்டுகளாக  வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். தற்போது இவர்களிடம் சுமார் 60 வெள்ளாடுகள் உள்ளன. ஆடுகளை தம்பதியினர் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலையில் ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளனர். அப்போது திடீரென 7 ஆடுகள் வாயில் நுரை தள்ளி நிலையில் இறந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அருணகிரி, ஆடுகளுக்கு மாத்திரை வாங்கி வந்து கொடுத்துள்ளார். ஆனாலும் நேற்று முன்தினம் மேலும் 4 வெள்ளாடுகளும், நேற்று 3 ஆடுகளும் வாயில் நுரை தள்ளி நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலறிந்த விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளை வரவழைத்து அனைத்து ஆடுகளுக்கும் நோய் பரவாமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. ஆடுகளுக்கு எந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய இறந்த ஆடுகளின் உறுப்புகளை மருத்துவர்கள் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அருணகிரி கூறுகையில், ஆடுகளை வளர்த்து கிடைக்கும் வருமானத்தை நம்பியே உள்ளோம். திடீரென ஆடுகள் மர்ம நோயால் உயிரிழந்துள்ளது. எனவே இறந்த ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: