எட்டயபுரம் அருகே உடையும் நிலையில் படர்ந்தபுளி கண்மாய் கிராமமக்கள் அச்சம்

எட்டயபுரம், டிச.5: எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் விளாத்திகுளம் சாலையின் இருபுறமும் கண்மாய் உள்ளது. தொடர் மழையால் இரு கண்மாய்களும் நிரம்பி உள்ளது. தென்புறமுள்ள கண்மாய் நிரம்பி வடபுறம் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்காகவும் வடபுறம் கண்மாய் நிரம்பியவுடன் தண்ணீர் செல்வதை நிறுத்தி வைப்பதற்காகவும் பாலம் அருகே தடுப்புசுவரும் மதகும் கட்டப்பட்டுள்ளது.

தற்போது மதகை தாண்டி தண்ணீர் செல்வதால் வடபுறம் கண்மாய் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து தண்ணீர் வந்தால் உடையும் நிலையில் உள்ளது. மேலும் வடபுறம் கண்மாய் கரையோரம் தாழ்வான பகுதியில் வீடுகள் உள்ளன. தண்ணீர் கரைமேல் தத்தளித்து கொண்டிருக்கிறது. ஒருவேளை கண்மாய் உடைந்தால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

இதனையடுத்து படர்ந்தபுளி விஏஓ முத்துக்குமார், கண்மாயின் தென்புறம் வாறுகால் அமைத்து உபரிநீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டார். வாறுகால் அமைக்க ஜேசிபி கிடைக்காததால் ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் உதவியுடன் சிறிதாக உபரிநீர் செல்வதற்கு வழி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இருப்பினும் தென்புறம் கண்மாயிலிருந்து தண்ணீர் வருவதாலும்,  மழை பெய்தாலும் கண்மாய் உடையும் நிலையில் உள்ளது. அதற்குள் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்புறம் கண்மாயிலிருந்து வடபுறம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழியில்லாததால் நிரம்பாமல் இருந்தது. இதுகுறித்தும் வடபுறம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல மதகு அமைக்கவேண்டும் எனவும் தினகரனில் செய்தி வெளியானது. இதனைதொடர்ந்து கடந்த ஆட்சியில் ரூ.2.5லட்சத்தில் மதகும் தடுப்புசுவரும் கட்டப்பட்டது. தற்போது கண்மாய் நிரம்பியும் தண்ணீரை அடைக்கமுடியவில்லை. அரசு பணம் விரையமானதோடு கண்மாய் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அதிக தண்ணீர் வந்தால் தடுத்து நிறுத்த தடுப்புசுவர் கட்டாமல் அலங்கார வளைவுபோல் கட்டப்பட்டுள்ள தடுப்புசுவரை மேலும் 2அடி உயரத்தவேண்டும். மேலும் மதகை அடைத்தாலும் தண்ணீர் வெளியேறுகிறது, அதனையும் சரிசெய்யவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: