மாவட்டம் முழுவதும் இதுவரை 16.67 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

கிருஷ்ணகிரி, டிச.5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 16.67 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், இஎஸ்ஐ மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 722க்கும் மேற்பட்ட மையங்களில் 13ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. மாவட்டத்தில் முதல் தவணையாக கொரோனா தடுப்பூசியை 10 லட்சத்து 99 ஆயிரத்து 139 நபர்களும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 5 லட்சத்து 67 ஆயிரத்து 896 நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதன்படி, முதல் மற்றும் இரண்டாவது தவணை என மொத்தம் 16 லட்சத்து 67 ஆயிரத்து 35 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று வரை கோவிஷீல்டு 4 லட்சத்து 2 ஆயிரத்து 280 தடுப்பூசிகளும், கோவாக்சின் 94 ஆயிரத்து 150 தடுப்பூசிகளும் என மொத்தம் 4 லட்சத்து 96 ஆயிரத்து 390 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. எனவே, முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: