மேல்நிலை தொட்டியில் இருந்து வினியோகம் குடிநீர் குடித்த 25 பேருக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி

ஊத்துக்கோட்டை, டிச.4: மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் மேட்டு காலனி மற்றும் பழைய காலனி ஆகிய பகுதிகளில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு 2 குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் இருந்து ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அப்பகுதியில் வசிக்கு சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட 10 பேரை மீட்டு ஊத்துக்கோட்டை அண்ணா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், பேரண்டூர் மேட்டு காலனியில் வசித்து வரும் மாணவன் புகழேந்தி(16), நாகேஷ்(42), மாலா(50), சிபியோன்(8), சுசில்குமார்(20), மனிஷா(17), தேசம்மாள்(37) ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பம்ப் ஆப்ரேட்டர் மனோகரன்(50), லைலா(60), பானு(40) ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரண்டூர் கிராமத்தில் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபாகரன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மேலும், 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குடிநீர் மேல்நிலை தொட்டிகளை ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறிந்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். பின்னர், பேரண்டூர் கிராமத்திற்கு சென்று இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறினார். குடிநீர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பேரண்டூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More