குடோனில் பதுக்கி வைத்திருந்த 34 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: உரிமையாளர் கைது

ஆவடி,  டிச.4:  ரேஷன் அரிசி  வெளிமாநிலங்களுக்கு விற்பதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்நிலையில், செங்குன்றம் வடகரை பாடசாலை தெருவில் உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த சிலர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி தலைமறைவாகினர். சோதனையில் அந்த குடோனில் 50 கிலோ எடை கொண்ட 680 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, போலீசார் 34 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் குடோனின் உரிமையாளரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், செங்குன்றம், வடகரை பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்(51) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தனது குடோனை அரிசி பதுக்கி வைப்பதற்காக சண்முகம், ஞானவேல் ஆகியோருக்கு அதிக பணத்திற்காக வாடகைக்கு விட்டுள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து ரேஷன் கடைகளில் ஊழியர்கள் உதவியுடன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்துள்ளனர். பின்னர், அதே அரிசியை ரைஸ் மில்களில் பாலிஷ் செய்து, மீண்டும் அதனை தமிழ்நாட்டுக்கே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் செல்லபாண்டியனை கைது செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கிய சண்முகம், ஞானவேல் ஆகியோரை தேடுகின்றனர்.

Related Stories:

More