ரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்

திருச்சி, டிச.4: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. இந்தாண்டு விழா நேற்று இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.

விழாவில் நாலாயிரதிவ்யபிரபந்தமானது பகல் பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக ரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகமாகும். ரங்கம் கோயிலில் இந்த நாலாயிரதிவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்த உடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து தெய்வப்பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்வதாக கருதுவதால் இந்த கோயிலில் படிக்கும் திவ்யபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். இந்த நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பு காயத்ரி மண்டபத்தில் நேற்று இரவு 7 மணிக்கு துவங்கி விடியவிடிய மூலஸ்தானத்தில் நடந்தது.

தொடர்ச்சியாக பகல்பத்து உற்சவம் இன்று (4ம் தேதி) துவங்குகிறது. காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடக்கிறது. 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் அடைகிறார். காலை 9 மணி முதல் 1 மணிவரையும், மாலை 4 முதல் 5.30 மணி வரையும் பொதுஜன சேவையுடன் அரையர் சேவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். தொடர்ந்து பகல் பத்து 10 நாட்களும் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பகல் பத்து உற்சவத்தையொட்டி இரவு 8.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. பகல்பத்து உற்வசத்தின் 10ம் நாளான 13ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம், 14ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பு அன்று நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. பகல்பத்து மற்றும் ராப்பத்து ஆகிய 20 நாட்களும் பெரிய பெருமாள் மூலவர் முத்தங்கி சேவையை தரிசிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விழா ஏற்பாடுகளை ரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

More