பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை

பொன்னமராவதி, ஏப்.23: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த திமுக பிரமுகருக்கு சொந்தமான காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடியை சேர்ந்தவர் ராசு. அரசு ஒப்பந்தகாரர். இவரது மகன் சக்திவேல். திமுக வர்த்தக அணி மாவட்ட துணைச்செயலாளர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தான் பார்த்த ஒப்பந்த பணிக்கு காசோலையை பெற்றுக்கொண்டு, பொன்னமராவதி ஸ்டேட் வங்கியில் காசோலையை மாற்றி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துள்ளார். அப்பணத்தை காரின் முன்பக்க இருக்கையில் வைத்து விட்டு காரை பொன்னமராவதி பேருந்துநிலைய உள்புறத்தில் நிறுத்தி விட்டு ரூ.60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு எதிரே உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் தனபாலன் சப்இன்ஸ்பெக்டர் வீரமணிஆகியோர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொன்னமராவதியில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியினை உடைத்து 4லட்சம் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை கண்டுபிடிப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>