மீன் பிடி தடைக்காலம் எதிரொலி...! வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு

வேலூர், ஏப்.19: மீன் பிடி தடைக்காலம் எதிரொலியாக வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் மீன் விலை அதிகரித்தது. வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் விற்பனை நடைபெறும் என்பதால் அன்று மட்டும் 50 டன் மீன்கள் வரப்பெறுவது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தின் கிழக்கு, மேற்கு கடல் பகுதியில்ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து நேற்று குறைந்துள்ளது. மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த வாரம் கிலோ ₹500க்கு விற்கப் பட்ட வஞ்சிரம் ₹1,200க்கும், ₹300க்கு விற்கப்பட்ட எறா ₹400க்கும், ₹150க்கு விற்கப்பட்ட வவ்வா ₹250க்கும் ₹80க்கு விற்கப்பட்ட மத்தி ₹120க்கும், ₹200க்கு விற்கப்பட்ட பாரை ₹400க்கும், ₹200 சீலாக்கு விற்கப்பட்ட ₹350க்கு உட்பட மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலூர் இறைச்சி மார்க்கெட்டுக்கும் போதிய அளவில் மீன் வரத்து இல்லை. இதன் காரணமாக ஏரி மீன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. ஆனால் ஏரி மீன்களும் குறைந்த அளவே விற்பனைக்கு வருவதால், அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>