சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

பள்ளிபாளையம், ஏப்.18:  சீரான குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பள்ளிபாளையம் ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி ஜீவா நகரில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கோடை வெயில் வாட்டுவதால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தினம் ஒரு முறை குடிநீர் வழங்கும்படி ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டனர்.

ஆனால் கோரிக்ைக ஏற்காமல் வழக்கம் போல ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், நேற்று காலை ஜீவா நகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் மேட்டுக்கடை பஸ் நிறுத்தத்தில் திரண்டு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் குமாரபாளையம்-வெப்படை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தினம் ஒரு முறை குடிநீர் வழங்க ஊராட்சி மன்றத்துடன் பேசி பிரச்னைக்கு தீர்வுகாண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: