கழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறும் அராபத் ஏரி: அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்

ஆவடி, ஏப்.15: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள அராபத் ஏரியில் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கலப்பதால் கூவமாக மாறி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சிடிஎச் சாலையை ஒட்டி, பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அராபத் ஏரி உள்ளது. இதனை சுற்றி மணிகண்டபுரம், சரவணா நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள மக்களுக்கு, இந்த ஏரி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. ஆனால், இந்த ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், அதில் கழிவுநீர் கலந்து நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பருவமழை இல்லாமல் ஆனது. இதனை பயன்படுத்தி கொண்டு, ஏரியை படிப்படியாக சமூக விரோதிகள் ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து விட்டனர். இதனை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், கையூட்டு பெற்று கொண்டு, கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அராபத் ஏரியின் நிலப்பகுதி சிறிது சிறிதாக ஆக்கிரமித்து தனியார் மோட்டார் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என குடியிருப்பு பகுதியாக உருமாறிவிட்டது. இதனால், மழைக்காலத்தில் ஏரியின் உபரிநீர், அருகில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதில், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியிலேயே கலந்து விடப்படுகிறது. இதுதவிர, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை தனியார் டேங்கர் லாரிகள் அரபாத் ஏரிக்கு செல்லும் கால்வாயில் நள்ளிரவில் விடுகின்றனர். இந்த  கழிவு நீரை ஏரியில் விடும் டேங்கர் லாரிகள் குறித்து சமூக ஆர்வலர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்கின்றனர். ஆனாலும், போலீசார் அவர்களிடம் ”மாமூல்” பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கழிவுநீர் கலந்து கூவம் ஆறு போல, அரபாத் ஏரி மாறி வருகிறது.

ஏரியை சுற்றியுள்ள வீடுகளின்  கிணறு, போர்வெல்களில் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏரி ஆக்கிரமிப்பை குறித்து சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு ஏரியை ஆக்கிரமித்தவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அதில், 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களும் முன்வரவில்லை. அதன் பின்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அராபத் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் விடுவதை தடுக்கவும், ஏரிக்கரையை சுற்றி நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

* 20 ஏக்கர் நிலம் மாயம்

அராபத் ஏரியில் இருந்து சுமார் 20 ஏக்கர் வரை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடையில் நீர்ப்பிடிப்பு பகுதி பிளாட் போட்டு விற்கப்படுகிறது. ஆனாலும், பொதுப்பணித் துறை அதிகாரிகள், அதனை கண்டு கொள்ளவில்லை. மேலும், அதிகாரிகள் உடந்தையுடன் ஏரியில் பிளாட் போட்டு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஏரியில் தொடர்ந்து தண்ணீரை சேமிக்க முடியவில்லை. வரும் கோடை காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>