ரம்ஜான் நோன்பு துவங்கியது பள்ளிவாசல்களில் இரவு சிறப்பு தொழுகை

மதுரை, ஏப். 15: இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நேற்று அதிகாலை துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசல்களில் தராவீஹ் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு நேற்று அதிகாலையில் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பிறை தெரிந்ததையடுத்து, அன்றைய இரவில் பள்ளிவாசல்களில் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடந்தது. மதுரை சதாசிவ நகர், தாசில்தார் நகர், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, கட்ராப்பாளையம், மகபூப்பாளையம், தெற்குவாசல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இந்த சிறப்பு தொழுகை நடந்தது. மதுரை சதாசிவ நகர் பள்ளிவாசலில், ஹாபீஸ் முகமது யாகூப் ஆலிம், தராவீஹ் தொழுகை நடத்தி, சிறப்பு பயான் நிகழ்த்தினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு தொழுகை நடந்தது. நோன்பையொட்டி தினமும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுமார் 14 மணி நேரம் தண்ணீர் கூட அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர்.

Related Stories: