சந்தூரில் அரசு பஸ் மீது டிராக்டர் மோதல்

போச்சம்பள்ளி, ஏப்.15: சந்தூரில் அரசு பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 25 பயணிகள் காயமடைந்தனர். போச்சம்பள்ளியிலிருந்து சந்தூர் வழியாக, காவேரிப்பட்டணம் வரை அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. நேற்று மதியம், காவேரிப்பட்டணத்திலிருந்து போச்சம்பள்ளியை நோக்கி டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தண்ணீர் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் திடீரென பஸ் மீது மோதியது. இதில் பஸ் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் 25 பயணிகள் 25 லேசான காயமடைந்தனர். பின்னர், அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடுகளுக்கு திரும்பினர். சாலையில் பஸ்சும், டிராக்டரும் சிக்கி கொண்டதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், போக்குவரத்து சீரடைந்தது. போச்சம்பள்ளியிலிருந்து சந்தூர் செல்லும் சாலை இருபுறமும் மிகக்குறுகலாக உள்ளது. ஒரு பஸ் மட்டும் செல்லும் அளவிற்கு குறுகலான சாலையாக உள்ளது. இதை அகலப்படுத்தினால் தான் சீரான போக்குவரத்து இருக்கும். இல்லையென்றால் விபத்து தொடர்கதையாகி விடும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: