பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி

கிருஷ்ணகிரி, ஏப்.15: கிருஷ்ணகிரியில் தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் நேற்று  நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை துறைமுகத்தில், 1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெடிபொருட்கள் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அழிந்துபோயின. இந்த விபத்தின் போது, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையைச் சார்ந்த 66 பேர் வீர மரணம் அடைந்தனர். அந்த வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின்போது தன் உயிரை தியாகம் செய்து, பிற உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை வகித்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன், நிலைய அலுவலர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: