திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாத அவலம்

திருப்பூர், ஏப். 14: திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில்  மதுப்பிரியர்கள் அதிகம் கூடுகிறார்கள். இதனால் சமூக இடைவெளி பின்பற்றப்படாத அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த 10 நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவுரையாக இருக்கிறது. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தாலோ, தடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்தாலோ, முககவசம் அணியாமல் இருந்தாலோ அபராத நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.இது ஒருபுறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு முண்டியடித்து சரக்குகளை வாங்குவதில் இருந்து ஒன்று சேர்ந்து மதுக்குடிப்பது வரை சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர். மாநகரின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அந்த கடைக்கு அருகே உள்ள தள்ளுவண்டி உணவகங்களில் மதுப்பிரியர்கள் கூட்டமாக கூடுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மதுப்பிரியர்கள் சரக்குகளை வாங்கி டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள சந்துப்பகுதியிலும், இரவு நேரங்களில் இருட்டு பகுதியிலும் நின்று மது அருந்தி விட்டு செல்கிறார்கள். மதுப்பிரியர்கள் கூடுவது கொரோனா பரவலுக்கு சாதகமாக அமையும் என்றும், மாவட்ட நிர்வாகம் இதில் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>