திருப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்

திருப்பூர், ஏப். 14: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகளவிலான மக்கள் தாமாக முன் வந்த வண்ணம் உள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மாநகராட்சியில் உள்ள 17 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தினமும் நடைபெறுகிறது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அனைத்து மையங்களிலும் ஆதார் அட்டை விவரங்கள் பதிவு செய்து, டோக்கன் வழங்கி, பயனாளிகள் சமூக இடைவெளியுடன் கூடிய வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.  முன்னதாக அவர்களுக்கு ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகிய பரிசோதனை செய்த பின்னரே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது தவிர பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் நிறுவன ஊழியர்களை அழைத்துச் சென்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளன. கொரோனா தடுப்பூசி புழக்கத்துக்கு வந்தபோது முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. இது பெருமளவு நிறைவடைந்த நிலையில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது நடைபெறும் முகாம்களில், 45 வயதுக்கு உட்பட்ட பலரும் ஆவலுடன் பங்கேற்க வந்தனர். ஆனால் 45 வயது கடந்தவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: