இளநிலை வரைதொழில் அலுவலர் தேர்வில் நேரடி பி.இ முடித்தவர்கள் சேரலாம் அறிவிப்பால் சிக்கல்

காரைக்குடி, ஏப்.14: இளநிலை வரை தொழில் அலுவலர் பணி தேர்வில் டிப்ளமோ சிவில் முடித்தவர்கள் மட்டும் எழுதமுடியும் என்ற நிலையில், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் பி.இ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளதால் டிப்ளமோ முடித்தவர்கள் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிப்ளமோ முடித்த மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். டிப்ளமோ சிவில் முடித்தவர்கள் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் மீன்வளத்துறையில் உள்ள இளநிலை வரை தொழில் அலுவலர்(ஜெ.டி.ஓ) பணியில் சேர தகுதி படைத்தவர்கள். இப்பணியிடத்துக்கு கடந்த 1991க்கு பிறகு 537 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியிடப்பட்டு இம் மாதம் 4ம் தேதி கடைசி. தேர்வு ஜூன் 6ம் தேதி நடக்கவுள்ளது.

இதற்கான வயது வரம்பு 35. இப்பணியில் டிப்ளமோ சிவில் முடித்தவர்கள் மட்டும் சேர தகுதி படைத்தவர்கள் என அரசிதலில் உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் டிகிரி முடித்தவர்களும் தேர்வு எழுதலாம் என உள்ளது. இதனால் டிப்ளமோ சிவில் முடித்து பல ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் பரிபோவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. விண்ணப்பதில் உள்ள கல்வி தகுதியில் டிப்ளமோ சிவில் முடித்தவர்கள் என உள்ளது. ஆனால் தனியார் பயிற்சி நிறுவனங்கள் நேரடியாக பி.இ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து பயிற்சி வழங்கி வருகின்றனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சியிடம் இமெயில் மூலம் கேட்டபோது டிப்ளமோ படிக்காமல் நேரடியாக சிவில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.

இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். டிஎன்பிஎஸ்சி சர்வீஸ் ரூல் 25ன் படி டிகிரி முடித்தவர்களும் சேரலாம் என தெரிவித்துள்ளனர். டிகிரி முடித்தவர்கள் பங்குபெறும் பட்சத்தில் எங்களின் வாய்ப்பு முற்றிலும் பறிக்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் பி.இ முடித்தவர்கள் பல்வேறு அரசு துறையில் 2386 பணியிடங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால் டிப்ளமோ முடித்தவர்கள் 92 பணியிடங்களில் மட்டுமே சேர்ந்துள்ளனர். எங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பது குறைவு. எங்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பிலும் நேரடியாக டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என உள்ளது மிகவும் வருத்தத்துக்கு உரியது.

அரசியல் அமைப்பு சட்டம் 16க்கு முரணானது. டிப்ளமோ முடித்து 34 வயது பூர்த்தியானவர்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு இதிலும் வாய்ப்பு கிடைக்கா விட்டால் அவர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். டிப்ளமோ முடித்து பி.இ முடித்தவர்கள் வரலாம். ஆனால் நேரடியாக பிளஸ் 2 முடித்து பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை மாற்ற வேண்டும். இதுகுறித்து முதல்வருக்கு டிப்ளமோ சிவில் முடித்து அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் கோரிக்கை மனுவை கடிதமாக அனுப்பியும் உரிய பதில் இல்லை.

Related Stories: