பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அலுவலர் ஆய்வு

பெரம்பலூர்,ஏப்.13: பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் வெங்கடபிரியா ஆய்வு செய்தார். பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தையும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர் அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குரும்பலூர், வேப்பூர் (மகளிர்) அரசு கல்லூரிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறை மூடி முத்திரையிடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் தொட ர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிக ளை 24 மணிநேரமும் பார்வையிட்டு கண்காணிப்பதற்காக டெபுட்டி கலெக்டர் நிலையிலுள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்களின் முகவர்களுக்கென தனி அறை ஏற்படுத்தப்பட்டு அந்த அறையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான பத்மஜா, குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சங்கர் மற்றும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: