பனி மற்றும் வெயில் காரணமாக பசுந்தேயிலை வரத்து குறைவு

ஊட்டி,ஏப்.12: நீலகிரியில் பனி மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களாக உள்ள சிறு குறு விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை கொள்முதல் மையங்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். பருவமழையானது கடந்த பொங்கல் வரை நீடித்தது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்து இருந்தது.

இந்த சூழலில் மழைக்கு பின் தாமதமாக உறைபனிப்பொழிவு துவங்கியது. பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால் தேயிலை செடிகள் கருகின. மேலும் பகல் நேரங்களில் கொளுத்திய வெயில் போன்ற காரணங்களால் பசுந்தேயிலை வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநிேயாகம் பாதிப்படைந்துள்ளது. அனைத்து கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் கிலோ அளவிற்கு மட்டுமே பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி குறைந்துள்ளது. சில தொழிற்சாலைகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உற்பத்தி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

பசுந்தேயிலை வளர்ச்சி இல்லாத நிலையில் இலைபறிக்க செல்லும் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். இவர்கள் கட்டுமான பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

Related Stories: