மனவலிமையால் நோயை வெற்றி கொள்ளலாம் கொரோனா வருமோ என்ற அச்சம் தவிர்க்க வேண்டும் டாக்டர் அட்வைஸ்

காரைக்குடி, ஏப். 12: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பின் படிப்படியாக தளர்வு அதிகரிக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை தாக்குதலுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருவதால் நோய் தாக்குதல் ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் பலர் மனஉளைச்சல் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தாக்குதலை விட இந்த மனஉளைச்சலால் ரத்தகொதிப்பு உள்பட பல நோய்கள் அதிகரித்து வரும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து டாக்டர் எம்சிவி.குமரேசன் கூறுகையில், கொரோனவை பார்த்து பயப்பட தேவையில்லை. கொரோனாவை விட அதை பார்த்து பயப்படுவர்களே அதிகமாக உள்ளனர். கொரோனாவல் ஏற்பட்ட இறப்பை விட பயத்தால் இறந்தவர்களே அதிகம். தூக்கமின்மை, மனஅழுத்ததால் மரடைப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை பார்த்து பயப்பட வேண்டாம் என கூறவில்லை அதற்காக அதிகமாக பயப்படக்கூடாது.

கொரோனாவந்தவுடன் இறந்து போவார்கள் என்பது தவறானது. அதுவும் ஒரு சாதாரண காய்ச்சல், தொண்டை காய்ச்சல் போன்றதுதான். ஆனால் கொரோனா தொடுதல், தும்மல் போன்றவைகளால் அதிகமாக பரவுகிறது. கொரோனா வராமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிவதன் மூலம் 80 சதவீத பரவலை கட்டுப்படுத்தலாம். வைட்டமின் சி மற்றும் இ உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. எதிர்ப்பு சக்தி மிக்க கொய்யா, நெல்லிக்காய் போன்ற பழங்கள் சாப்பிடலாம்.

ஆண்கள் துளசி இலையை 2 அல்லது 3 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது நல்லது. பாலில் இஞ்சி, மஞ்சள் தூள், துளசி இலை, ஏலக்காய், பனை வெல்லம், உலர்ந்த திராட்சை சேர்த்து குடிக்கலாம். பிறநாட்டு பழங்களை தவிர்த்து உள்ளூர் பழங்களை சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம். பப்பாளி, கேரட் சாப்பிடலாம். கருஞ்சீரகம் பயன்படுத்தலாம். பேக்கரி பொருட்கள், இனிப்பு, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். மனவலிமையை அதிகரிக்க உடற்பயிற்சி அவசியம். உப்பு போட்டு தினமும் இரண்டு வேளை வாய் கொப்பளிக்க வேண்டும். வைரஸ் தாக்குதல் வந்தாலும் பயப்படாமல் மனவலிமையை அதிகரித்து எதிர்ப்பு சக்திமிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கொரோனாவை நாம் வெற்றிகொள்ளலாம் என்றார்.

Related Stories: