அரியலூர் பெரியநாயகியம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா

அரியலூர்,ஏப்.12: அரியலூர் பெரியநாகியம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி, நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கோயிலின் முன்பு கிடா வெட்டி அதன் ரத்தத்தை சாதத்தில் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலிலிருந்து பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக மதியம் 1 மணிக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி உருவத்துக்கு கீழ் கொட்டப்பட்டிருந்த அரிசி சாதத்தில் கிடா வெட்டி அதன் ரத்தத்தை கலந்தனர். பின்னர், அந்த சாதத்தை அள்ளி இரைத்தனர். அந்த ரத்த சோற்றை அங்கு திரண்டிருந்த பெண்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். இந்த திருவிழாவில் பங்கேற்று, ரத்த சோற்றை பெற்றால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேறு, திருமணத்தடை, பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கும் என்ற ஐதீகத்தால் அரியலூர் நகர பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அருள் வந்து சாமி ஆடியவர்களிடம் பக்தர்கள் கோழிகளை நேர்த்தி கடனாக செலுத்தினர். சாமியாடியவர்கள் கோழிகளை பெற்று அதன் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: