வாடிக்கையாளர் செய்யும் தவறுக்கு வணிகர்களை தண்டிக்கக் கூடாது

நாமக்கல், ஏப்.12: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் விஜயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து வணிக நிறுவனங்களிலும் கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்கப்படும். வணிக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பார்கள். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் கொடுத்து கடைகளுக்குள் செல்ல அனுமதிக்கிறோம். சில நேரங்களில் அதிகாரிகள் சோதனை செய்ய வரும்போது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாதிருப்பின் அதற்கான அபராதத்தை வணிக நிறுவனத்திடம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

பொது இடத்தில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறதோ அதே போலவே நிறுவனங்களுக்குள் முகக்கவசம் அணியாதோருக்கு அவர்களிடமே அபராதம் வசூலிக்கவேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் வசூல் செய்யப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். இதில் நிறைய அத்துமீறல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. மேலும், இதனால் வணிகர்களும், வணிக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.கொரோனா தொற்று பரவுதல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அனைத்து வணிக நிறுவனங்களிலும் காட்சிப்படுத்தவும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்கவும் ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.அரசுடன் இணைந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதன் இணைப்பு சங்கங்கள் மூலமாக மாவட்டம் முழுக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தி வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: