தொண்டி அருகே அரசு பேருந்து மோதி பெண் பலி பஸ் நிற்காமல் சென்றதால் கிராமமக்கள் சாலை மறியல்

தொண்டி, ஏப்.10: கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்தார். நிற்காமல் சென்ற பஸ் டிரைவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டி அருகே வடக்கூரை சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது மனைவி மாரிக்கண்ணு(60) உடன் நேற்று டூவீலரில் தொண்டி மின்வாரியம் எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாரிகண்ணு பலியானார்.ஆனால் விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பஸ் ஓட்டுனரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: