கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் அமலைகள் அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கோவில்பட்டி, ஏப். 10: கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள அமலை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அருகே மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கோவில்பட்டி நகரில் இருந்து மழை காலங்களில் வெளியேறும் தண்ணீர் வந்து சேரும். மேலும் இனாம்மணியாச்சி கிராமத்தில் இருந்து இந்த கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் வழியாகவும் இந்த கண்மாய்க்கு மழைநீர் வந்து தேங்கும். இக்கண்மாயில் தேங்கும் மழைநீரை, மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் நெல், கத்தரி, வெங்காயம், மிளகாய், தக்காளி போன்ற பயிர்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படாமல் இருந்ததால் மணல் மேடுகளாக காட்சியளித்தது. இதனால் மழை காலங்களில் போதிய தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் இணைந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மூப்பன்பட்டி கண்மாயை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி இக்குழுவினர் கண்மாயில் மண்மேடுகளை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்தியதுடன் கரைகளையும் மேம்படுத்தினர். இதனால் பருவமழை காலங்களில் நகரம் மற்றும் வரப்பு கால்வாய்களில் இருந்து வெளியேறிய மழைநீர் இக்கண்மாயில் தேங்கி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இந்நிலையில் இந்தாண்டும் பெய்த தொடர் மழையால் கண்மாயில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றது. இருப்பினும் கண்மாய் தண்ணீரில் அமலை செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுவதால், இச்செடிகளின் வேர்கள் தண்ணீரை உறிஞ்சி வைத்து கொள்கின்றன. இதனால் கண்மாயில் தண்ணீர் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. எனவே மூப்பன்பட்டி கிராம விவசாயிகளின் நலன்கருதி கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள அமலை செடிகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: