சமயபுரம் கோயில் சித்திரை தேர் திருவிழா

மண்ணச்சநல்லூர், ஏப்.10: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். இக்கோயிலில் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை தேர் திருவிழா. கடந்த ஆண்டு கொரோனா ெதாற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் சித்திரை தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நாளை (11ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் தேர் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30ம் தேதி 10ம் திருநாளன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் கோயில் 2ம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபம் சேர்கிறார். வரும் 23ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறும். இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்துள்ளனர்.

Related Stories: