ஒரத்தநாடு பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது

தஞ்சை,ஏப்.9: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஒரத்தநாடு பேருந்து நிலையம் சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட பழமைவாய்ந்த பேருந்து நிலையம். ஒரத்தநாட்டை சுற்றியுள்ள சுமார் 98 பஞ்சாயத்துகளுக்கு இங்கு இருந்துதான் பேருந்துகள் செல்கின்றன. மேலும் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கறம்பக்குடி, மன்னார்குடி, திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் நீரால் சூழ்ந்தது. தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்தினால் மேற்கூரைகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய நேற்று பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் போது திடீரென மேற்கூரை சரிந்து விழுந்ததால் அதில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர்.  மேலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேற்கூரை இடிந்து விழுந்த தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனடியாக சரி செய்தனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: