சேலம் கோட்டத்தில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு

சேலம், ஏப்.9: சேலம் போக்குவரத்து கோட்டத்தில், 33 பணிமனைகளில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று 2வது அலை வீச தொடங்கியுள்ளது. நாளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி அரசு போக்குவரத்து கழகங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பரவாமல் இருக்க அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 32 பணிமனைகள்  உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த பணி மனைகளில் 45 வயதுக்கு மேல் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணி மனையில் முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.   கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பஸ்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்களில் தினசரி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கண்டக்டர், டிரைவர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அவ்வாறு அணியாத டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் தான் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும். அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை பின்பற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.    

Related Stories: