காவிரியில் இருந்து பாசனத்துக்கு நீர்வழங்க மின்வாரிய நிலத்தை ஆக்கிரமித்து விதிமுறை மீறி குழாய் பதிக்கும் பணி

குமாரபாளையம், ஏப்.9: காவிரி கதவணையில் இருந்து பாசனத்துக்கு நீர்வழங்கிட, விதிமுறை மீறி மின்சார வாரிய நிலத்தில் பாதை அமைத்து, குழாய்களை கொண்டு செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து தேவூர் செல்லும் வழியில் புள்ளாக் கவுண்டம்பட்டியில் மின்உற்பத்தி கதவணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதவணை மூலம் 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக ஆற்றில் தண்ணீர் தேக்கி வெளியேற்றப்படுகிறது. இந்த கதவணையில் இருந்து சீரங்க கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரகாசம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, சின்னுசாமி, நஞ்சப்பன், சென்றாயன், மாரிமுத்து, சின்னுசாமி ஆகிய 6 விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல நீரேற்று நிலையம் அமைத்துள்ளனர். தற்போது நீரேற்று நிலையத்தில் இருந்து விளை நிலங்களுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை ஓடையின் வழியாக குழாய்களை அமைக்க அனுமதிபெற்ற பாசன விவசாயிகள், விதிமுறை மீறி மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, குழாய்களை பதித்து, அதன்மீது பாதை அமைத்துள்ளதாக, அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் துரைசாமி, ஈஸ்வரமூர்த்தி, மோகன்குமார், தங்கராசு, மகேஸ்வரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்கள் முன்பு ஆளும்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு, அதிரடியாக சாலையை தோண்டி குழாய் அமைத்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. இது தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது மீண்டும் பிரச்னை எழுந்துள்ளதால், துரைசாமி தரப்பினர் ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளரிடம் இது குறித்து புகார் செய்துள்ளனர். மின்வாரிய நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் அமைத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். மின்வாரிய நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விவசாயி பிரகாசம் கூறுகையில், ‘ நாங்கள் மின்வாரிய நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. முறைப்படி அனைத்து அனுமதிகளை பெற்று தான் இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எங்கள் நீரேற்று திட்டத்திற்கு மின் இணைப்பு கொடுக்கவே, மின்வாரிய பூமியில் பாதை வரி அமைக்கப்பட்டு உள்ளது. இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு, பாதைவரி முற்றிலும் அகற்றப்படும்’ என்றனர். இதுகுறித்து கதவணை திட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது.  நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தப்படும்’ என்றனர்.  ஒருதரப்பு விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல, மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>