மானாமதுரையில் 2 மாதமாக ரேஷன் கடைகளில் பச்சரிசி விநிேயாகம் இல்லை பொதுமக்கள் புகார்

மானாமதுரை, ஏப்.2: மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக பச்சரிசி விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை போன்றவை இந்திய உணவுக்கழகத்தின் மூலம் மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. மத்திய சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும். தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கில் இருந்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் கடந்த இரண்டு மாதங்களாக பச்சரிசி கிடைப்பதில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

மானாமதுரை தாலுகாவில் 67 ரேஷன்கடைகளில் 51 கடைகள் முழுநேர கடைகளாக உள்ளன. இவற்றில் 29 ஆயிரம் கார்டுகளுக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.  அரிசியை பொறுத்தளவில் கார்டுக்கு 15 கிலோ புழுங்கல் அரிசி, 5 கிலோ பச்சரிசி என 20 கிலோ வழங்கப்படுகிறது. இவற்றில் புழுங்கல் அரிசியை முழுமையாக யாரும் வாங்குவதில்லை. பச்சரிசி போட்டால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பச்சரிசி அனைவருக்கும் கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து கவுரி கூறுகையில், நடுத்தர குடும்பங்களில் வழக்கமான நாட்களில் இட்லிக்கு அடுத்தபடியாக கோதுமை சப்பாத்தி, அரிசி மாவில் இடியாப்பம் செய்வது வழக்கம். இடியாப்பம் செய்வதற்கு ரேஷனில் மாதம்தோறும் 5 கிலோ பச்சரிசி வழங்கப்படும். இவற்றை மாவுமில்களில் அரைத்து ஒரு மாதத்திற்கு பயன்படுத்துவோம். ஆனால் கடந்த இரண்டுமாதங்களாக பச்சரிசி வழங்கப்படுவதில்லை. விற்பனையாளர்களிடம் கேட்டால் ஸ்டாக் வரவில்லை என்று கூறுகின்றனர்.

அரிசி மாவில் தயாராகும் இடியாப்பம், புட்டு வகைகள் குழந்தைகள் பெரியவர்களுக்கு எளிதாக ஜீரணமாகும் என்பதால் வேறுவழியின்றி மளிகை கடைகளில் காசுகொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே ரேஷன்கடைகளில் பச்சரிசி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: