பரமக்குடி தொகுதி கிராமங்களில் உலர்களம் அமைத்து தரப்படும் திமுக வேட்பாளர் முருகேசன் உறுதி

பரமக்குடி, ஏப்.2:  பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசன் பரமக்குடி நகர் கிழக்கு ஒன்றிய பகுதிகளான மடந்தை ஊராட்சி, தோளூர் ஊராட்சி,  மேலாய்க்குடி ஊராட்சி,  பாம்பூர் ஊராட்சி உள்ளிட்ட 25 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘‘பரமக்குடி தொகுதியில் 10 ஆண்டுகளாக எந்த திட்டங்களும் நடைபெறாமல் உள்ளது. சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கட்சிக்காரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கமிஷன் பெற்று பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், எந்த திட்டங்களும் முறையாக நடைபெறவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், கிராமங்கள்தோறும் விவசாயிகள் விவசாய பொருள்களை உலர்த்துவதற்கு உலர் களம் அமைக்கப்படும். பரமக்குடி தொகுதியில் திமுக அலை வீசுகிறது. கட்டாயம் திமுக பரமக்குடி தொகுதியை வென்றெடுக்கும். தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாதத்திற்கு ஒரு முறை கோரிக்கை மனு பெறுவதற்கு முகாம்கள் நடத்தப்படும்’’ என்றார். பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாநில தீர்மான குழு  துணை தலைவர் சுப.த.திவாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கமுதி ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், கஞ்சியனேந்தல் தர்மன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன்,  பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், பரமக்குடி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Related Stories: