கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மூர்த்தி எம்எல்ஏ வாக்குறுதி

மதுரை, ஏப்.2:  மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மூர்த்தி எம்எல்ஏ போட்டியிடுகிறார். அவர் வண்டியூர், சவுராஷ்டிராபுரம், பாசிங்காபுரம் உள்பட பல பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘நெசவாளர் நலனில் அக்கறை கொள்ளும் ஒரே கட்சி திமுக. திமுக ஆட்சி அமைந்தவுடன், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தப்படும். நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். பள்ளிக்கட்டிடம், சமுதாயக்கூடம், அய்யன் திருவள்ளுவர் நூலகங்கள் திறக்கப்படும்’’ என்றார்.  இதனிடையே யாதவ சமூகத்தை சேர்ந்த கபிலன், கந்தவேல், பேராசிரியர் கண்ணதாசன், ருத்திரமூர்த்தி, சேது, சதீஷ், சசிகுமார், பூமிநாதன், புதூர் சேகர், கவியரசு, ஆசைக்கண்ணன் உள்பட திரளானோர் மூர்த்தி எம்எல்ஏவை சந்தித்து, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  அவர்கள் மத்தியில் மூர்த்தி எம்எல்ஏ பேசும்போது, ‘‘யாதவ சமுதாயத்தினர், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டுமென முழு ஆதரவு தர முன்வந்துள்ளனர். மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்களில் ஒருவனாக செயலாற்றி வருகிறேன்.  தொடர்ந்து உங்களுக்கு செயலாற்றுவேன். மாவட்ட நிர்வாகம் வசம் உள்ள யாதவ கல்லூரி மீட்கப்பட்டு, யாதவர் சமுதாயத்தினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும். கிடா, ஆடு, கால்நடை மேய்ச்சல் வாரியம் அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: