விளாத்திகுளம் தொழில் நகரமாக மாற்றப்படும் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் உறுதி

விளாத்திகுளம்,மார்ச் 30: விளாத்திகுளம் தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் உறுதியளித்துள்ளார். விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெங்கடாசலபுரம், மலைப்பட்டி, சிந்தலக்கரை, ராசாபட்டி, துரைசாமிபுரம், கீழநம்பியாபுரம், வடக்கு முத்தையாபுரம், சிலுவைபுரம், கீழ சண்முகபுரம், வேம்பார் பேருந்து நிலையம், சிந்தாமணி நகர், தில்லை நகர் கீதாநகர், சுனாமி காலனி, முத்தையாபுரம், குஞ்சையாபுரம், பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.விளாத்திகுளம் தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தொகுதியின் கடற்கரை பகுதியிலுள்ள வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும்.

வேம்பார் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தரமான சாலை அமைத்து தரப்படும். விளாத்திகுளம் தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெறும் தேர்தல் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதற்கான தேர்தலாக உள்ளது. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அந்த அளவிற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரம் மருத்துவர்களுடன் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக சாா்பில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: