மயிலாடுதுறையில் சாலைகள் சீரமைப்பு மும்முரம் அதிகமான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அச்சம்

மயிலாடுதுறை, மார்ச் 25: மயிலாடுதுறை நகரில் 36 வார்டுகளிலும் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆங்காங்கே தடுப்புகட்டைபோல் வேகத்தடை அமைப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

மயிலாடுதுறை நகரில் உள்ள 36 வார்டுகளில் உள்ள சாலைகளை புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக சாலை அமைத்துச்சென்ற பிறகு ஒரு தெருவிற்கு 4 முதல் 10 வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது. இந்த வேகத்தடைகள் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கிறதா, எந்த தேவைக்காக இந்த வேகத்தடை அமைக்கப்படுகிறது என்ற காரணம் இல்லாமல் ஆங்காங்கே வேகத்தடையை அமைத்துக் கொள்கின்றனர். அதுவும் அந்த வேகத்தடை வேகத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு வளைவாக இல்லாமல் இருசக்கர வாகனம் ஏறி இறங்கும்போது வாகனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டையைபோல் அமைத்து விடுவதால் ஆட்டோ பைக் மற்றும் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோர் பலவித தொல்லையை அனுபவிக்க நேரிடுகிறது. வேகத்தடை அமைப்பதை நகராட்சி அதிகாரிகள் ஆய்வுசெய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்றும், அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்காலில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

காரைக்கால், மார்ச் 25: காரைக்காலில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காரைக்காலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது காரைக்கால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 22ம் தேதி 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்தார். 23ம் தேதி அன்று 389 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்ததில் திருநள்ளாறு மற்றும் நிரவியில் தலா 7 பேருக்கும், கோட்டுச்சேரியில் 5 பேருக்கும், திருப்பட்டினத்தில் 4 பேருக்கும், வரிச்சிக்குடி மற்றும் காரைக்காலில் தலா 3 பேருக்கும், அம்பகரத்தூர், நெடுங்காடு, கோவில்பத்து பகுதியில் தலா ஒருவருக்கும் என 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2 பேர் மேலும் உயிரிழந்துள்ளதை அடுத்து காரைக்காலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆனது. இதுவரை காரைக்காலில் 4,211 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 3,999 பேர் குணமடைந்துள்ளனர். 136 பேர் தனிமைபடுத்தப்பட்டும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் முழுவதும் இதுவரை 92,394 பேருக்கு கொரோனா பரிசோதனை நடை பெற்றுள்ளது. கொரோனா அதிகரித்து வருவது காரைக்கால் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: