39 மனுக்கள் தள்ளுபடி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊடக மைய கண்காணிப்பு அறையை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

திருவாரூர், மார்ச் 23: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊடக மைய கண்காணிப்பு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர் அருண்குமார் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மற்றும் தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஊடக கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்திற்கான இந்த ஊடகக் கண்காணிப்பு மையத்தில் மாவட்டத்திற்கென திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகளுக்காக தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் பார்வையிட்டு தனியார் டிவியில் வரும் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்பான விளம்பரங்கள், பிரசார செய்திகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றினை கண்காணிப்பதற்கு இது போன்று ஊடக மையமானது திறக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இது மட்டுமின்றி உள்ளூர் டிவி ஒளிபரப்பும் கண்காணிக்கப்படுகிறது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண்குமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தானகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: