வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காஸ் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் வைத்திருந்த லாரியில் பயங்கர தீ

வேலூர், மார்ச் 22: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காஸ் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் வைத்திருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி சர்வீஸ் சாலையோரம் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரியின் பின்பக்கம் நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து கரும்புகை கிளம்பியது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த லாரியில் துணிகள், பைக், சைக்கிள், சமையல் பாத்திரங்கள், 2 காஸ் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் ஆகியன இருந்தது. இதனால் தீயை அணைக்கும்போது, காஸ் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அகற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பரஸ்ராம் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. மேலும் சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருப்பதும் சென்னையில், தெரிந்த நபர்களிடம் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ராஜஸ்தானிற்கு டெலிவெரி செய்வதற்காக எடுத்துச் செல்வதாகவும் லாரி டிரைவர் தெரிவித்தார். மேலும் நேற்று கண்ணமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றதாக தெரிவித்தார். இதற்கிடையில், வெப்பம் காரணமாக லாரியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: