பெரம்பலூர், குன்னம் தொகுதியில் 49 பேர் வேட்புமனு தாக்கல்

பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் 17 பேரும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 32 பேரும் இறுதிநாளான நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். இன்று (20ம் தேதி) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கடந்த 12ம்தேதி முதல் இறுதி நாளான நேற்று (19ம் தேதி) வரை திமுக சார்பாக பிரபாகரன், அதிமுக சார்பாக தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, தேமுதிக சார்பாக ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வழக்கறிஞர் காமராஜ், நாம் தமிழர் கட்சி சார்பாக மகேஸ்வரி, ஐஜேகே கூட்டணி சார்பாக சசிகலா, புதிய தமிழகம் சார்பாக ராதிகா, தேசியவாத காங்கிரஸ் சார்பாக குண சேகரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேர் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான, சப்.கலெக்டர் பத்மஜா என்பவரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை திமுக சார்பாக சிவசங்கர், அதிமுக சார்பாக ஆர்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ, தமிழ்ப்பேரரசு கட்சி சார்பாக டைரக்டர் கவுதமன், நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கறிஞர் அருள், அமமுக சார்பாக கார்த்திகேயன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சாதிக்பாட்ஷா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 32பேர் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் என்பவரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் மனுக்கள் பரிசீலனை இன்று (20ம் தேதி) பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல்நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜா லைமையில் பெரம்பலூரிலும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்டவழங்கல் அலுவலர் சங்கர் தலைமையில் குன்னம் தாலுகா அலுவலகத்திலும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்களான பெரம்பலூர் சின்னதுரை, குன்னம் கிருஷ்ணராஜ் ஆகியோரும் செய்துள்ளனர்.

Related Stories: