மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும்: மரகதம் குமாரவேல் உறுதி

மதுராந்தகம், மார்ச் 20: மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மதுராந்தகம் ஏரி தூர்வரும் பணியை தொடங்கி மிக வேகமாக செய்து முடிப்பேன் என மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தெரிவித்தார். மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான மரகதம் குமரவேல்,  தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களையும் சந்தித்து நேற்று வாக்கு சேகரித்தார். இதையொட்டி, அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து, அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார் உள்ளிட்டோரிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, திருத்தலத்துக்கு வந்த 100க்கும் மேற்பட்டோரிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர், அச்சிறுப்பாக்கம் தர்கா ஒன்றுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார். அப்போது, தர்காவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழிபாடு செய்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். ெதாடர்ந்து, மதுராந்தகம் நகராட்சிக்கு வந்த அவர், நகராட்சி அதிமுக மகளிர் அணியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது. இப்பகுதி மக்களின் முக்கிய தேவையான மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

அந்த கோரிக்கையை ஏற்ற நம்முடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கென தூர்வாரும் பணிக்கு சுமார் ₹130 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் அந்த பணிகள் தொடங்கி மிக வேகமாக செய்து முடிக்கப்படும். இதன்மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள். இந்த பணியினை நானே முன்நின்று செய்து முடிப்பேன்’ என்றார்.

Related Stories: