அங்காளம்மன் கோயில்களில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நேற்று தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நேற்று தேர் திருவிழா நடந்தது. அதன்படி, கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 68ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, திருத்தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து வைத்து பம்பை, மேளதாளத்துடன், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் ஆகியவற்றுடன் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல், சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமம் பர்வத மலை அடிவாரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், செய்யாறு மார்க்கெட் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் நேற்று தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related Stories: