எழும்பூர் அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம்

சென்னை, மார்ச் 18: கண் அழுத்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் விழிப்புணர்வு வாரம் நடந்து வருகிறது.  சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், குளுக்கோமா எனப்படும், கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு வாரம் நடந்து வருகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு, கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை டாக்டர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், “இந்தியாவில், 1.20 கோடிக்கு அதிகமானவர்கள் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் தங்களுக்கு கண் அழுத்த நோய் இருப்பதை அறியாதவர்களாக உள்ளனர்.

 மேலும் கண் அழுத்த நோய் ஏற்படும்போது, கண்ணிற்குள் உள்ள அழுத்தம் அதிகரித்து, கண்ணில் உள்ள, நரம்புகளும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் பக்கவாட்டு பார்வை திறன் இழப்பு, மங்கலான பார்வை, கண் வலி மற்றும் தலைவலி, வெளிச்சத்தை சுற்றி வண்ணமயமான ஒளி வளையங்கள், படிப்பதற்கு பயன்படுத்தும் கண்ணாடியை அடிக்கடி மாற்றுதல் போன்ற நிலை உருவாகும். எனவே, 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு, உயர் அழுத்தம், தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பாதிப்பு கண்டறியப்பட்ட பின், ஆண்டுக்கு இருமுறை பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண் அழுத்த நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால் பார்வை திறன் இழப்பை தவிர்க்கலாம்” என்றார்.

Related Stories: