9 ஆண்டுகளாக 2 பெண் குழந்தைகளுடன் கு.க. செய்த பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்குமா?

க.பரமத்தி, மார்ச்18: 9ஆண்டுகளாக இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்த தாய்மார்களுக்கு, சமூக நலத்துறையால் உதவி ஏதும் கிடைக்கவில்லை கிடப்பில் உள்ள இந்த திட்டத்திற்கு அரசு உயிர் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பயனாளிகளிடையே எழுந்துள்ளது. இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் தாய் மார்களுக்கு, உதவித் தொகை கேட்டு மனு அளித்து 9ஆண்டுகளுக்கு மேலாகியும் பத்திரம் எவருக்கும் சமூக நலத்துறையால் வழங்காமல் கிடப்பில் உள்ள இந்த திட்டத்தை மீண்டும் உயிரூட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், இராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி ஆகிய 30-ஊராட்சிகள் உள்ளன.இதில் குக்கிராமங்களில் இரண்டு பெண் குழந்தை திட்டம் கடந்த 24ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இவை கடந்த திமுக ஆட்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 15.ஆயிரம் வழங்கப்பட்டு வந்த திட்டம், 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவை ரூ 25ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் தாய்மார்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் இரண்டு பெண் குழந் தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையை ரூபாயாக கொடுக்காமல், அரசு சார்பில் பத்திரங்களாக வழங்குகின்றனர். இந்த பத்திரங்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பெண் குழந்தைகள் வளர்ந்து திருமண வயதை எட்டி விட்டால் பத்திரங்கள் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன் பெற இரண்டு பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் பயன் பெற இரண்டாவது குழந்தை பிறந்த 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் தாய்மார்கள் பலர் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்து விட்டு இத்திட்டத்தில் பயன்பெற இருப்பிடச் சான்றிதழ், இரண்டு பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறு க.பரமத்தி ஒன்றியத்தில் விண்ணப்பித்த புன்னம் ஊராட்சி புன்னம்பசுபதிபாளையம் சொர்ணசுந்தரிகுணசேகரன் என்பவர் சுமார் 9ஆண்டு காலமாக விண்ணப்பித்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல சில பயனாளிகளுக்கு இது வரை நிதி வழங்கப்பட வில்லையென விண்ணப்பித்த ஏராளமானோர் பலரும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே 9ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகள் பயன்பெற சம்பந்தப்பட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் முன் வரவேண்டுமென பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: