பொய்த்து போன தென்மேற்கு பருவமழை; வறண்ட அமராவதி ஆற்றில் களை இழந்த ஆடி 18 திருவிழா

 

தாராபுரம்,ஆக.4: ஆடி பதினெட்டை முன்னிட்டு தாராபுரம் அமராவதி ஆற்றுக்கு வந்த பக்தர்கள், பெண்கள், புதுமண தம்பதிகள் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். ஆடி 18-ஐ முன்னிட்டு தாராபுரம் காமராஜபுரம், வடதாரை, தெற்கு தெரு, கொளத்துப்பாளையம், காளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அமராவதி ஆற்றங்கரையில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் அமராவதி ஆறு வறண்டு கட்டாந்தரையாக காட்சி அளித்தது. இதனால் முளைப்பாரிகளை ஆற்றில் கரைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் குழியில் தேங்கிய சேற்று நீரிலேயே இறங்கி, முளைப்பாரியை கரைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

பெண்கள் வழக்கமாக ஆற்று மண்ணில் சப்த கன்னியர் சாமிகளைப் பிடித்து தாங்கள் அணிந்துள்ள நகைகளை அதற்கு அணிவித்து புது மஞ்சள் கயிறு மாற்றுவது வழக்கம். இந்த சடங்குகளை நிறைவேற்ற முடியாமல் புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்தனர். அகிலாண்டேஸ்வரி அம்மன் உற்சவ மூர்த்தி சிலையை சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து அமராவதி அன்னையை தரிசித்து திரும்ப கோவிலுக்கு செல்லும் சிறப்பு வழிபாட்டிற்கு கூட தேங்கிய தண்ணீரில் பூஜைகளை முடித்து அம்மன் சிலையை திரும்ப கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

 

Related Stories: